18. அருள்மிகு லோகநாதன் கோயில்
மூலவர் லோகநாதன், சியாமளமேனிப் பெருமாள்
உத்ஸவர் தாமோதர நாராயணன்
தாயார் லோகநாயகி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சிரவண புஷ்கரணி
விமானம் உத்பல விமானம்
தல விருட்சம் மகிழ மரம் (வகுள மரம்)
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருக்கண்ணங்குடி, தமிழ்நாடு
வழிகாட்டி நாகப்பட்டினத்திலிருந்து சிக்கல் செல்லும் பேருந்தில் சென்று ஆழியூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். இரயில் மார்க்கமாக தஞ்சாவூரிலிருந்து கீவளூர் செல்லும் இரயில் பாதையில் கீவளூர் இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
தலச்சிறப்பு

Tirukannankudi Gopuram Tirukannankudi Moolavarவசிஷ்ட மகரிஷி வெண்ணையால் ஒரு கிருஷ்ண விக்கிரகத்தைச் செய்து தினமும் ஆராதித்து வந்தார். ஒருநாள் கிருஷ்ணன் குழந்தை வடிவம் எடுத்து விழுங்கி விட்டார். அதனால் வசிஷ்டர் அவரைத் துரத்திக் கொண்டு ஓட, கிருஷ்ணாரண்யத்தில் உள்ள மகிழ மரத்தடியில் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்துக் கொண்டிருந்த முனிவர்கள், கண்ணன் வருவதை உணர்ந்து தமது பக்தி என்னும் பாசக் கயிற்றால் கட்டினர். பகவான் அனைவருக்கும் காட்சி தந்து, அவர்கள் வேண்டுகோளின்படி அங்கேயே எழுந்தருளினார். கண்ணன் இத்தலத்தில் எழுந்தருளியதால் 'கண்ணங்குடி' என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் லோகநாதன், சியாமளமேனிப் பெருமாள் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் தாமோதர நாராயணன். தாயார் லோகநாயகி என்றும் உத்ஸவத் தாயார் அரவிந்தவல்லி என்றும் வணங்கப்படுகின்றனர். பிரம்மா, பிருகு முனிவர், கௌதம முனிவர், உபரிசரவஸு, திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

'காயாமகிழ், உறங்காப்புளி, தேறாவழக்கு, ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி' என்பது பழமொழி. இவற்றில் உறங்காப்புளியும், ஊறாக்கிணறும் தற்போது இல்லை. காயாமகிழ் (காய்ந்து பட்டுப்போகாத மகிழ மரம்) மட்டும் சந்நிதியின் பின்புறத்தில் உள்ளது.

பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்று. திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கவித்தலம், திருக்கோவிலூர் பிற க்ஷேத்திரங்கள்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com